மறைந்த முன்னாள் முதல்– மந்திரி என்.டி.ராமராவின் பேரனும் பிரபல தெலுங்கு நடிகருமான ஜூனியர் என்.டி.ஆரை கொல்ல முயற்சி நடந்தது. அவர் வீட்டில் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம ஆசாமி தப்பி ஓடிவிட்டான்.
தெலுங்கானா பிரச்சினையில் ஜூனியர் என்.டி.ஆருக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. தெலுங்கானா பகுதியில் ஜூனியர் என்.டி.ஆர். படங்களை திரையிடக்கூடாது என்றும் தியேட்டர் அதிபர்கள் மிரட்டப்படுகிறார்கள்.
இந்த நிலையில் ஐதராபாத் நகரில் ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜூனியர் என்.டி.ஆர் வீட்டுக்குள் அடையாளம் தெரியாத மர்ம நபர் கையில் துப்பாக்கியுடன் புகுந்தான். வீட்டின் மதில் சுவரை ஏறி குதித்து மெதுவாக நடந்து போனான்.
வீட்டில் காவலுக்கு நின்ற பாதுகாவலர்கள் அவனை பார்த்து விட்டனர். அவனை பிடிக்க ஓடி வந்தார்கள். இதனால் சுதாரித்துக்கொண்ட அந்த ஆசாமி துப்பாக்கியுடன் வந்த வழியே திரும்பி ஓடி மதிலை தாவி குதித்தான். வெளியே நிறுத்தி வைத்திருந்த நம்பர் பிளேட் இல்லாத வண்டியில் ஏறி தப்பி ஓடிவிட்டான்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மர்ம ஆசாமி படம் ரோட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து ஜுப்ளி ஹில்ஸ் போலீசில் ஜூனியர் என்.டி.ஆர். புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்.
No comments:
Post a Comment